Published : 12 Oct 2025 01:10 AM
Last Updated : 12 Oct 2025 01:10 AM
பத்தனம்திட்டா: கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளின் தங்க கவசங்கள் கடந்த 2019-ல் செப்பனிடப்பட்டன. அப்போது அதிலிருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று கூறியதாவது: தங்கம் மாயமான விவகாரத்தில் தேவஸ்வம் துணை ஆணையர் பி.முராரி பாபுவுக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு முன் சபரிமலையில் டிடிபி நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். 9 அதிகாரிகளின் தவறுகளை விஜிலென்ஸ் கண்டறிந்துள்ளது. முராரி பாபு மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். மற்ற அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் டிடிபி கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
டிடிபி செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அலுவலர் சுதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபர ணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்டோர் மீது நவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தங்க கவசங்களின் எடை குறைந்திருப்பதை பைஜுவுக்குப் பிறகு வந்த அதிகாரி அறிந்திருந்தும் புகார் அளிக்க தவறிவிட்டார்.
துவாரபாலகர் தங்க கவசங்களை செப்பனிடும் பொறுப்பை பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றி ஏற்றிருந்த நிலையில், அந்த கவசங்களை திருவாபரணம் ஆணையரின் மேற்பார்வையின் கீழ் ஒப்படைக்க வேண்டும் என தேவஸ்வம் வாரியம் கடந்த 2019-ல் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை டிடிபி செயலாளர் ஜெய, தங்க கவசங்களை போற்றியிடம் ஒப்படைக்கலாம் என்று மட்டும் நிர்வாக அதிகாரி மற்றும் ஆணையரிடம் தெரிவித்தார். இதுபோன்ற நடைமுறை குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தற்போதைய தேவஸ்வம் வாரியத்துக்கு தொடர்பில்லை. எனினும் எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் பொறுப்பற்ற வகையில் பேசக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT