Published : 12 Oct 2025 01:07 AM
Last Updated : 12 Oct 2025 01:07 AM
துர்காபூர்: மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில், ஒடிசாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்கிறார்.
இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணியளவில் கல்லூரிக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் மருத்துவ மாணவியை மிரட்டி அருகில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியுடன் சென்ற ஆண் நண்பர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நேற்று போலீஸில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் நண்பர் பொய் சொல்லியும், தவறாக வழிநடத்தியும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் தனது மகளின் செல்போனை பறித்துக் கொண்டு, அவரிடம் இருந்த ரூ.5,000 பணத்தையும் பறித்துச் சென்றுள்ளது என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி துர்காபூரில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவ மாணவியின் நண்பர் உட்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து துர்காபூரில் பாஜக.வினர் போராட்டம் நடத்தினர். மேற்குவங்கத்தில் கடந்த ஜூலை மாதம் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திலேயே ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை கொலைக்கு ஆளானார். இதுபோன்ற சம்பவங்களால் மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் அரசு, பெண்கள் பாதுகாப்பில் அலட்சியமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT