Published : 11 Oct 2025 10:35 AM
Last Updated : 11 Oct 2025 10:35 AM
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம்.
முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்.பியான அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை முடக்கியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தம் தலைவரது பக்கத்தை மீண்டும் நிறுவுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது. அதேசமயம், பேஸ்புக்கின் இந்த நடவடிக்கையை சமாஜ்வாதி கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து சமாஜ்வாதி எம்.பி.யான ராஜீவ் ராய் குறிப்பிடுகையில், ’இந்த செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், சோசலிசக் குரல்களை அடக்கும் முயற்சி. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவரின் கணக்கு முடக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
முன்னாள் முதல்வர் மீதான இந்த நடவடிக்கை, ஆளும் கட்சியின் உத்தரவின் பேரில் நடந்திருந்தால், அது கோழைத்தனத்தின் அடையாளம். சோசலிஸ்டுகளின் குரலை அடக்க முயற்சிப்பது தவறு.’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT