Published : 10 Oct 2025 02:21 PM
Last Updated : 10 Oct 2025 02:21 PM
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்பான எந்தத் தகவலும் கசியக்கூடாது என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு சீல் வைக்கப்பட்ட கவரை நேரடியாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விசாரணைத் தகவல்களை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை குறித்து நீதிமன்றத்திற்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சபரிமலை விவகாரம் குறித்து உன்னிகிருஷ்ணன் போட்டி ஊடகங்களிடம் பேசுவதையும் உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. அதேபோல மாநில காவல்துறைத் தலைவரையும் வழக்கில் ஒரு தரப்பாக உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது.
வழக்கில் தற்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பதிவாளர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், வழக்கின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, விசாரணைக் குழுவை விரிவுபடுத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் மேலும் இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள் இடம்பெறுவார்கள். 2019 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு தங்க முலாம் பூசப்பட்ட தங்கத் தகடுகளை வழங்கிய திருவிதாங்கூர் தேவசம் போர்டின் நடவடிக்கையையும் உயர் நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
தேவசம் போர்டு விஜிலென்ஸ் எஸ்பி நேரில் ஆஜராகி, இன்று காலையில் உயர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான எஸ்பிஎஸ். சசிதரனுடன் ஆலோசனை செய்தது.
பின்னணி என்ன? - கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளுக்கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்டது. இந்தச் சூழலில் துவார பாலகர் சிலைகளின் பீடங்களை காணவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
தங்க முலாம் பூசப்பட்ட பீடத்தை தேடி கண்டுபிடிக்க ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு நடத்திய விசாரணையில், தங்க முலாம் பூசப்பட்ட பீடம் மீட்கப்பட்டது. உயர் நீதிமன்ற விசாரணையில் துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மொத்தம் 4 கிலோ தங்கம் மாயமாகி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT