Published : 10 Oct 2025 10:28 AM
Last Updated : 10 Oct 2025 10:28 AM
புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் காவலர்கள் பணிக்கானத் தேர்வு அக்டோபர் 30-ல் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தகுதி கொண்ட பணிக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச காவல்துறையில் காவலர்(கான்ஸ்டபிள்) ஆட்சேர்ப்பில் 7,500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக, மபி மாநிலத்தின் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த காவலர் பணிக்கானக் குறைந்தபட்ச தகுதி உயர்நிலைப்பள்ளியின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும், ஆனால் விண்ணப்பதாரர்களில் 52,000 முதுகலை பட்டதாரிகள், 33,000 பட்டதாரிகள், 12,000 பொறியாளர்கள் மற்றும் சுமார் 50 முனைவர் பட்டம் பெற்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். இப்பணிக்கானத் எழுத்துத் தேர்வு அக்டோபர் 30-ம் தேதி காலை, மாலை என இரண்டு வேளைகளாக நடைபெறுகிறது. இப்பணிக்கு முனைவர் உள்ளிட்ட பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பது மபியின் இளைஞர்களுக்கு அரசு வேலை பெறுவது முக்கியமாக உள்ளது.
பாஜக ஆளும் இம் மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், பல்வேறு பட்டம் பெற்றவர்கள் கூட பத்தாம் வகுப்பு நிலை வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விண்ணப்பதார்களில் ஒருவரான சிந்த்வாராவைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி பல்லவி சவுகிகர் கூறுகையில், ’எனது கல்விக்குப் பொருத்தமான வேலை கிடைக்காததால் காவல்துறையின் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பித்துள்ளேன்.
எனக்கு இங்கே ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை. எனது குடும்பச் சூழல் காரணமாக, மபிக்கு வெளியே கிடைக்கும் பணிக்கு என்னால் செல்ல முடியவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.
பேதுல் பகுதியைச் சேர்ந்த கணிதத்தில் எம்எஸ்சி படித்த நிதி தோத்தே கூறும்போது, ’எனக்கு உரியப் பணி கிடைக்காதமையால் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிஎஸ்சி மற்றும் எம்ஏ. பட்டம் பெற்ற செஹோரைச் சேர்ந்த விஜய் வர்மா, ‘எனது கிராமத்தில், அரசு வேலை கிடைப்பது ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.
எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட அரசு பணிக்கு விண்ணப்பிப்பதை விட வேறு வழியில்லை. மபியின் அரசு வேலை என்பதால் கான்ஸ்டபிள் தேர்விற்கு விண்ணப்பித்துக் காத்திருக்கிறேன்.’ எனத் தெரிவித்தார்.
இதுபோல், மபியின் காவல்துறை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பிற்கு பட்டதாரிகள் இடையேயும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இது, வேகமாக அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் அரசுப் பணிகளுக்கு உருவாகி விட்ட கடுமையான போட்டியையும் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT