Published : 10 Oct 2025 07:25 AM
Last Updated : 10 Oct 2025 07:25 AM
பெங்களூரு: கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மகளிருக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை 12 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 12 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் வகையில் இந்தக் கொள்கை திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதால் பெண்கள் மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை எடுத்துக் கொள்ளலாம். எனவே பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்ப, ஒரு மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஒரே நேரத்தில் மொத்தமாகவும் (12 நாட்கள்வரை) விடுப்பு எடுக்கலாம்.
இது அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் பெண்களுக்கு பொருந்தும். இவ்வாறு அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT