Last Updated : 09 Oct, 2025 11:10 AM

1  

Published : 09 Oct 2025 11:10 AM
Last Updated : 09 Oct 2025 11:10 AM

தலித், ஒபிசி, முஸ்லிம் சமூகத்தின் 3 துணை முதல்வர்கள்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்!

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட உள்ளார். வெற்றிக்கு பின் தலித், ஒபிசி மற்றும் முஸ்லிம் சமூகங்களிலிருந்து 3 துணை முதல்வர்களை நியமிக்கும் அறிவிப்பும் வெளியாக உள்ளது.

பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி. தேசிய அளவிலான இக்கூட்டணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), திமுக உள்ளிட்ட சுமார் 25 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், பிஹாரில் இண்டியா, ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி எனும் பெயரில் போட்டியிடுகிறது. பிஹாரின் முக்கிய எதிர்கட்சியான ஆர்ஜேடியின் தலைவராக லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ் உள்ளார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக, மெகா கூட்டணி தனது முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துகிறது. முதல்வர் வேட்பாளராக உள்ள தேஜஸ்வி யாதவுடன் வெற்றிக்குபின் மூன்று துணை முதல்வர்கள் அமர்த்தவும் மெகா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

இம்மூன்று துணை முதல்வர்களையும் தலித், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் முஸ்லிம் சமூகங்களிலிருந்து தேர்வு செய்யவும் முடிவாகி உள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு மெகா கூட்டணியின் முக்கியக் கட்சியான காங்கிரஸின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ஏனெனில், பிஹாரில் நடைபெற்ற ராகுல் யாத்திரைக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருமே தேஜஸ்வியின் பெயரை முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்து பேசியிருந்தனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் மட்டும் இதன் மீதான பத்திரிகையாளர்களின் கேள்விகளை தவிர்த்து வந்தார்.

பிஹாரின் துணை முதல்வராக இரண்டு முறை தேஜஸ்வி இருந்துள்ளார். வெற்றிக்கு பின் கூட்டணியில் பதவிகளுக்காக எழும் சமூகப் பிரச்சனைகளைத் தவிர்க்க இதுபோல், துணை முதல்வர்கள் அமர்த்தப்படுகின்றனர். இந்த உத்தியை முதன்முறையாக பிஹாரில் துவக்கிய பாஜக அதை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அமலாக்கி விட்டது.

பிஹாரில் தற்போது முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருடன் பாஜகவின் இரு துணை முதல்வர்களாக சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகியோர் உள்ளனர். இவர்கள் முறையே ஒபிசி மற்றும் பூமியார் சமூகத்தினர் ஆவர்.

இது குறித்து ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில், ‘யாதவ் சமூகத்தையே அடித்தளமாக்கி போட்டியிட்டு வந்தது எங்கள் ஆர்ஜேடி. இந்த அரசியலில் இருந்து மாறி, தலித்துகள், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினருக்கும் இந்த தேர்தலில் முக்கியத்துவம் அளிக்க உள்ளது.

இது பிஹார் தேர்தலில் அரசியலில் ஒரு ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ ஆக அமையும். இந்த சூத்திரத்தின் மூலம் பிஹாரில் மெகா கூட்டணி வெற்றிபெறும்’ எனத் தெரிவித்தார்.

இதற்காக, கடந்த தேர்தலைப் போலன்றி மெகா கூட்டணியின் தொகுதி உடன்பாட்டிலும் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதன்படி, ஆர்ஜேடி தோராயமாக 125 இடங்களில் போட்டியிடும்.

கடந்த 2020-ல் ஆர்ஜேடி போட்டியிட்ட 143 இடங்களை விட 19 இடங்கள் குறைவு. காங்கிரஸ் 50 முதல் 55 இடங்களில் போட்டியிடும், இடதுசாரி கட்சிகள் தோராயமாக 25 இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள இடங்கள் விஐபி, ஆர்எல்எஸ்பி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற பிற கூட்டணிக் கட்சிகளிடையே பிரிக்கப்படும் என கணிக்கப்படுகிறது.

இதற்கானப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை. பிஹாரின் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் இருகட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட 121 தொகுதிகளுக்கு அக்டோபர் 10-லும், 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 13 அன்று முடிந்த பின், நவம்பர் 14-ல் முடிவுகள் வெளியாகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x