Published : 09 Oct 2025 07:02 AM
Last Updated : 09 Oct 2025 07:02 AM
கோனசீமா: ஆந்திராவில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், டாக்டர். பிஆர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ராயவரம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 40 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே, நேற்று காலை பட்டாசு கிடங்கில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆலையில் 40 பேர் பணியாற்றி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சில நிமிடங்களிலேயே நெருப்பும் கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக தீயணைப்பு படை, போலீஸாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில், இரு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டதும் அங்குள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதற்கடியில் பலர் சிக்கி கொண்டனர்.
இவர்களை மீட்டு வனபர்த்தி அரசு மருத்துவமனைக்கும், சிலரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த கோர தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் லேசான தீக்காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராயவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிகாரிகளிடம் நடந்த விபத்து குறித்து கேட்டறிந்தார். உடனடியாக உள்துறை அமைச்சர் அனிதாவை சம்பவ இடத்துக்கு செல்லும்படி உத்தரவிட்டார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகேஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT