Published : 09 Oct 2025 12:49 AM
Last Updated : 09 Oct 2025 12:49 AM
மும்பை: நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த விமான நிலையம் அதானி குழுமத்தால் பொது தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாதிரியின்கீழ் கட்டப் பட்டுள்ளது. இங்கு வரும் டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான சேவை தொடங்க உள்ளது.
விமான நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: மும்பையில் பயணம் மற்றும் இணைப்பை மாற்றி அமைப்பதில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் முக்கிய பங்காற்றும். மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் இணைப்பதன் மூலம் இந்த விமான நிலையம் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தும். இது, ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக உருவெடுக்கும்.
இன்று மும்பை முழுவதும் எளிதாக பயணிக்க வசதியாக இந்த நகரம் முழுமையான நிலத்தடி மெட்ரோவை கொண்டுள்ளது. கட்டுமான நெருக்கம் மிகுந்த மும்பை போன்ற ஒரு நகரத்தில் நிலத்தடி மெட்ரோவை தொடங்குவது ஒரு பெரிய சாதனை.
நவி மும்பை சர்வதேச விமான நிலைய திட்டம் விக்சித் பாரத்தை பிரதிபலிக்கும் ஒரு திட்டம் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டில், இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. இப்போது நம்மிடம் 160-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முக்கிய அம்சங்கள்: நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (என்எம்ஐஏ) முதல் கட்ட பணிகள் ரூ.19,650 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இந்த கிரீன்ஃபீல்டு விமான நிலைய திட்டம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து செயல்படும். நெரிசலை குறைத்து, பல விமான நிலையங்களைக் கொண்ட உலகளாவிய நகரங்களில் மும்பையை முக்கிய புள்ளியாக இது நிலைநிறுத்தும்.
நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 1,160 ஹெக்டேர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த விமான நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதும், ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகளைக் கையாளும். அத்துடன் 3.25 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளும் அளவுக்கு திறன் அதிகரிக்கும்.
நவி மும்பை சர்வதேச விமான நிலையம் தற்போது ஒரு முனைய அமைப்புடன் ஒற்றை ஓடுபாதையை கொண்டு செயல்படும். இதன்மூலம், ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய உள்கட்டமைப்பு ஆரம்பத்தில் மணிக்கு 20-22 விமானங்களை நிர்வகிக்கும். அடுத்த ஆண்டு இந்த திறனை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். முதல் முனையம் திறக்கப்பட்ட 12-15 மாதங்களுக்குள் அதன் அதிகபட்ச செயல்பாட்டு திறனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT