Last Updated : 08 Oct, 2025 01:20 PM

 

Published : 08 Oct 2025 01:20 PM
Last Updated : 08 Oct 2025 01:20 PM

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர்: மோடியுடன் நாளை சந்திப்பு

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை, மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்னாந் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர்.

இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருடன் இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றும் வர்த்தகக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். கெய்ர் ஸ்டார்மரை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வர்த்தகக் குழுவுடன் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தந்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்கிறோம். பரஸ்பரம் வலுவான, வளமான எதிர்காலத்துக்கான பகிரப்பட்ட நமது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளைய சந்திப்பை எதிர்நோக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மும்பையில் நாளை (அக்டோபர் 9) காலை 10 மணி அளவில், பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருக்கு விருந்தளிக்கிறார். நண்பகல் 1.40 மணி அளவில் இருநாட்டு பிரதமர்களும் மும்பை ஜியோ உலக மையத்தில் நடைபெறும் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அதன் பின்னர், பிற்பகல், 2.45 மணி அளவில் உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவின் 6-வது பதிப்பில் இருவரும் பங்கேற்கின்றனர். மேலும், இருவரும் விழாவில் முக்கிய உரையாற்றுகின்றனர்.

“இந்தியா - இங்கிலாந்து இடையே விஷன் 2035 எனும் தொலைநோக்குத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, காலநிலை மாற்றம், எரிசக்தி, சுகாதாரம், கல்வி, மக்கள் தொடர்பு ஆகிய முக்கிய துறைகளில் இரு நாடுகளும் அதிக ஒத்துழைப்புடன் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தற்போதைய நிலை தொடர்பாக இரு பிரதமர்களும் மதிப்பாய்வு செய்வார்கள்” என்று இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x