Published : 08 Oct 2025 11:08 AM
Last Updated : 08 Oct 2025 11:08 AM
சென்னை: சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது.
சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘ ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில், திரைப்பட நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் அமித் சக்கலக்கலின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள சில வாகன உரிமையாளர்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் கொச்சி மண்டல அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது. கொச்சியில் பனம்பிள்ளி நகரில் உள்ள நடிகர் மம்மூட்டியின் பழைய இல்லமான மம்மூட்டி ஹவுஸில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 23 அன்று கொச்சியில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் முக்கிய கார் ஷோரூம்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடந்தன. அந்தச் சோதனைகளின் போது, கடந்த சில ஆண்டுகளாக பூட்டானில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 37 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில் மேலும் மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் துல்கர் சல்மான் மற்றும் அமித் சக்கலக்கல்லுக்குச் சொந்தமான பல வாகனங்களும் அடங்கும். துல்கர் சல்மான் தனது வாகனங்களை விடுவிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். செவ்வாயன்று, அவரது உயர் ரக சொகுசு வாகனங்களில் ஒன்றை விடுவிக்க சுங்கச் சட்டத்தின் கீழ் தீர்ப்பளிக்கும் அதிகாரியை அணுகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT