Published : 08 Oct 2025 08:07 AM
Last Updated : 08 Oct 2025 08:07 AM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்தர் எம்.பி. கஜேன் முர்மு, சிலிகுரி எம்எல்ஏ. சங்கர் கோஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பார்வையிடச் சென்றனர்.
இவர்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதில் முர்மு, கோஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிலிகுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 நாட்களுக்குள் அறிக்கை: இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, முர்முவை நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மேல் சிகிச்சை உட்பட அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மக்களவை செயலகம் நேற்று அறிக்கை கோரியது. மேற்கு வங்க அரசிடமிருந்து 3 நாட்களுக்குள் அறிக்கை பெற்று சமர்ப்பிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ஐஏ விசாரணை: மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘முர்மு, கோஷ் மீதான தாக்குதல் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் ஆகும்.
சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் மற்றும் ரோஹிங்கியாக்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதை தடுக்க மாநில காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார். சிலிகுரியில் முகாமிட்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில், “கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை தனிப்பட்ட முறையில் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை உடனடியாக செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை சீர்செய்யும் பணி நடைபெறுகிறது’’ என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT