Published : 08 Oct 2025 12:37 AM
Last Updated : 08 Oct 2025 12:37 AM
புதுடெல்லி: உ.பி.யில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.40 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உ.பி.யில் துப்புரவுப் பணியில் பெரும்பாலும் வால்மீகி சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தலைநகர் லக்னோவில், பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மகாசபா அறக்கட்டளை சார்பில் மகரிஷி வால்மீகி பிரகத் திவஸ் நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக முதல்வர் யோகி பங்கேற்று பேசியதாவது: வால்மீகி பகவானை அவமதிப்பது ராமரை அவமதிப்பது போலாகும். இவர்களை வைத்து எதிர்க்கட்சிகள் சாதி அரசியல் செய்கின்றன. இதிலிருந்து தப்பிக்க வால்மீகி சமூகத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். வால்மீகி சமூகத்தினருக்கு அளிக்கப்படும் மரியாதை வால்மீகியின் மரபுக்கு செய்யும் மரியாதை ஆகும்.
உ.பி.யில் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர் துரதிருஷ்டவசமாக விபத்துக்குள்ளானால், அவரது குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த தொகை அவுட்சோர்சிங் நிறுவனங்கள் மூலமாக அன்றி, அரசு நிறுவனம் மூலம் பெற்றுத் தரப்படும். சுமார் 80 ஆயிரம் பேருக்கு இந்தக் காப்பீடு வழங்கப்படும்.
ராமாயணத்திலும் ராமர் தான் உண்மையான மதம் என்று வால்மீகி குறிப்பிட்டுள்ளார். இதற்காக, மனித சமூகம் பகவான் வால்மீகிக்கு நன்றி தெரிவிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் மகரிஷி வால்மீகியின் படம் இருக்க வேண்டும். ராமாயண காலத்தில் மகரிஷி வால்மீகி, மகாபாரத காலத்தில் மகரிஷி வேத வியாசர், இடைக்காலத்தில் சத்குரு ரவிதாஸ், சுதந்திரப் போராட்டத்தின்போது பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோர் சமூகத்தை வழிநடத்தினர்.
வாக்கு வங்கி என்ற பெயரில் சாதியின் உதவியை நாடுகின்றனர். 2012-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சமூக நீதியின் முன்னோடிகளின் நினைவுச் சின்னங்கள் இடிக்கப்படும் அச்சுறுத்தல் எழுந்தது. கன்னோஜ் மருத்துவக் கல்லூரியின் பெயரில் இருந்து 'பாபா சாஹேப்' நீக்கப்பட்டது. லக்னோ மொழி பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டிருந்த கன்ஷி ராமின் பெயரும் சமாஜ்வாதி கட்சியால் மாற்றப்பட்டது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT