Published : 07 Oct 2025 07:39 AM
Last Updated : 07 Oct 2025 07:39 AM
புதுடெல்லி: உ.பி.யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்மிக மடம் தொடங்கியவர் பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்கள் உள்ளனர். நிரஞ்சன் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பட்டம் பெற்ற இவர், அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
பூஜா, கடந்த 2019 ஜனவரியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, அதற்கு தீவைத்து எரித்தவர். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் பூஜா மடத்தின் நிர்வாகியும் தொழிலதிபருமான அபிஷேக் குப்தாவும் (32) கைதானார். பிறகு அபிஷேக் - பூஜா இடையே விரோதம் ஏற்பட்டது.
இதனால், மற்றொரு மட நிர்வாகி அசோக் பாண்டேவுடன் இணைந்து அபிஷேக்கை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த அலிகர் போலீஸார் பஸல், அசோக் பாண்டே ஆகிய இருவரையும் கைது செய்தனர். நேற்று கொலையாளி ஆசீப்பை கைது செய்தனர். தலைமறைவான சாமியார் பூஜா பற்றிய தகவலுக்கு ரூ.25,000 வெகுமதி அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் பூஜா பற்றிய பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது மட நிர்வாகி அசோக் பாண்டேவை ரகசியமாக திருமணம் செய்துகொண்ட பூஜாவுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த அசோக், அகில இந்திய இந்து மகா சபையின் தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ளார். இருவரும் தங்கள் குழந்தைகளை வேறு இடத்தில் ரகசியமாக வளர்த்து வருவதாகத் தெரிகிறது.
மேலும் கொல்லப்பட்ட அபிஷேக்குடனும் பூஜா நெருக்கத்தை வளர்த்திருந்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு மறுத்ததால்தான் பூஜாவுடன் அபிஷேக்கிற்கு விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த விரோதம், அபிஷேக்கை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் பூஜாவை போலீஸார் தேடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT