Published : 06 Oct 2025 10:28 PM
Last Updated : 06 Oct 2025 10:28 PM
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உடன் பேசினேன். இன்று முன்னதாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது நீதியின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது? - உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஒரு வழக்கின் விசாரணையை தொடங்கியபோது, அவர் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணியை வீச முயன்றார். ஆனால், அமர்வின் முன்னாலேயே விழுந்தது. இந்தச் சம்பவம் காரணமாக அங்கே பரபரப்பு ஏற்பட்டது. காலணியை வீசிய ராகேஷ் கிஷோர் உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" என்று கூச்சலிட்டார்.
இதனை தொடர்ந்து, ராகேஷ் கிஷோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அதேநேரத்தில் தலைமை நீதிபதி கவாய் அமைதியாக இருந்து, இடையூறு இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தார். மேலும், "இதனால் எல்லாம் திசைதிருப்பப்பட வேண்டாம். இவை எல்லாம் என்னைப் பாதிக்காது, விசாரணையைத் தொடருங்கள்" என்று அவர் கூறினார்.
இதன் பின்னர், இச்சம்பவம் குறித்து விவாதிக்க பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்புப் பொறுப்பாளர் உள்ளிட்ட நீதிமன்ற அதிகாரிகளுடன் கவாய் ஆலோசனை நடத்தினார். ராகேஷ் கிஷோர் 2011 முதல் வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிராக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. செப்டம்பரில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள 7 அடி விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி கவாய், மனுதாரரிடம், "இது முற்றிலும் விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு. போய் இப்போது கடவுளிடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
இந்த கருத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து, தனது கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் தான் மதிப்பதாகவும் கவாய் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT