Last Updated : 06 Oct, 2025 09:17 PM

1  

Published : 06 Oct 2025 09:17 PM
Last Updated : 06 Oct 2025 09:17 PM

பிஹார் தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தப் போகும் ஆறு தலைவர்கள் - ஒரு பார்வை

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிஹார் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப்போகும் 6 தலைவர்களை குறித்து பார்ப்போம்.

நரேந்திர மோடி: மக்களவைத் தேர்தல் என்றாலும் சரி, சட்டப்பேரவை தேர்தல்கள் என்றாலும் சரி, வட மாநிலங்களில் பாஜகவின் கதாநாயகன் பிரதமர் நரேந்திர மோடிதான். பிஹாரிலும் மோடிதான் பாஜகவின் ஐகான். இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களாக அடிக்கடி பிஹாருக்கு சென்று, பல திட்டங்களை அறிவித்து தொடங்கிவைத்தார்.

இந்த முறை பிஹாரில் தனிப்பெரும்பான்மை பெற பாஜக விரும்புகிறது. அதற்கேற்ப வியூகங்களுடன் பிரதமர் மோடி, பிரச்சாரத் திட்டத்தை வகுப்பார் எனவும் சொல்லப்படுகிறது. பிஹாரில் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் அளவுக்கு மக்கள் ஈர்ப்பு கொண்ட எந்த மாநிலத் தலைவரும் பாஜகவில் இல்லை. எனவே, பிரதமர் மோடிதான் பிஹார் தேர்தலின் பாஜகவின் முக்கிய முகமாக உள்ளார்.

நிதிஷ் குமார்: 2005 முதல் தற்போது வரை 20 ஆண்டுகளாக பிஹாரின் முதல்வராக இருந்து வருகிறார் நிதிஷ் குமார், இடையில் 278 நாட்கள் மட்டும் அவரது கட்சியின் ஜிதன் ராம் மாஞ்சி முதல்வராக இருந்தார். இந்த முறையும் பிஹார் முதல்வர் பதவிக்கு நிதிஷ் குமார் மறுக்க முடியாத தேர்வாக இருக்கிறார். ‘முதல்வர் பதவியில் நிதிஷ் குமார் ஒருபோதும் மாறுவதில்லை, அவர் தனது கூட்டாளிகளை மட்டுமே மாற்றுகிறார்’ என்பது பிஹாரின் ஒரு பிரபலமான பழமொழியாகிவிட்டது.

கடந்த முறை பாஜகவைவிட குறைவான இடங்களிலேயே நிதிஷ் குமார் கட்சி வென்றது. எனவே இம்முறை ஆட்சி மீதான அதிருப்தியை தாண்டி வெற்றி வாகை சூட, மகளிர், விவசாயிகள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்புக்கும் இலவசங்களை வாரி வழங்கியுள்ளார்

தேஜஸ்வி யாதவ்: பிஹாரின் மிக முக்கிய தலைவரான லாலு பிரசாத் யாதவின் வாரிசு தேஜஸ்வி யாதவ். இவர் தலைமையிலான ஆர்ஜேடி கட்சி 2020-இல் பாஜகவுக்கு அடுத்து அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. எனவே, இம்முறை வென்றே ஆக வேண்டும் என்ற உறுதியோடு பணியாற்றுகிறார் தேஜஸ்வி. 2005 முதல் ஆர்ஜேடியால் பிஹாரில் ஆட்சியமைக்க முடியவில்லை.

லாலு பிரசாத்தின் உடல்நிலை, அவரது குடும்பத்துக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அக்கட்சியின் முஸ்லிம் - யாதவ் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பிளவு ஆகியவை அக்கட்சிக்கான பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், நிதிஷ் குமாருக்கு அடுத்து பிஹாரில் மக்களின் விருப்பத்துக்குரிய முகமாக தேஜஸ்வியே உள்ளார். ஆட்சிக்கு எதிரான மனநிலை தன்னை முன்னிலைக்கு கொண்டு வரும் என அவர் ஆழமாக நம்புகிறார்.

ராகுல் காந்தி: 1990 வரை பிஹாரின் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால், அதன்பின்னர் அங்கே வலுவான எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியவில்லை. கடந்த 2020 தேர்தலிலும் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றது. எனவே, இம்முறை எப்படியேனும் பிஹாரில் சரித்திரம் படைக்க விரும்புகிறார் ராகுல். அதன் முன்னோட்டமாகவே 'வாக்காளர் அதிகார யாத்திரை’யை தேஜஸ்வியுடன் இணைந்து நடத்தினார். மேலும், பிஹாரில் அவர் எழுப்பியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் பேசுபொருளாகியுள்ளது.

பிரசாந்த் கிஷோர்: தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியலில் புதிதாக நுழைந்தவர் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர். இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனது யாத்திரை மூலம் பிஹாரில் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் பாஜக - ஜேடியு மற்றும் ஆர்ஜேடி - காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் வரும் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பை விட, யாரின் வாக்குகளை பிரித்து யாரின் வெற்றிக்கு காரணமாக மாறப்போகிறார் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

அசாதுதீன் ஓவைசி: யாருமே எதிர்பார்க்காத நிலையில், 2020 பிஹார் தேர்தலில் ஐந்து இடங்களை வென்று சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் சீமாஞ்சல் பகுதியில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியது. இம்முறையும் ஒவைசி பிஹாரில் தனித்து தேர்தலைச் சந்திக்கப் போகிறார். எனவே இம்முறையும் அவர் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பார் என சொல்லப்படுகிறது. அது நிச்சயம் ஆர்ஜேடி, காங்கிரஸுக்கு பின்னடைவாகும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த முறை வென்ற ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ-க்களில் நான்கு பேர் தேர்தலுக்குப் பிறகு ஆர்ஜேடி-க்கு தாவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x