Published : 06 Oct 2025 11:57 AM
Last Updated : 06 Oct 2025 11:57 AM
கொல்கத்தா: டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டவை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிக்கைகளில், சர்சாலி, ஜஸ்பிர்கான், மிரிக் பஸ்தி, தார் காவ்ன் (மெச்சி), மிரிக் ஏரிப் பகுதி மற்றும் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள நக்ரகாட்டா பகுதி ஆகிய பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.
நிலைமை மோசமடைந்ததால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, 24x7 கட்டுப்பாட்டு அறையைத் திறந்துவைத்தார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மம்தா பானர்ஜி இன்று நேரில் செல்லவுள்ளார்.
2015 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவு இது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாக உறுப்பினர் அருண் சிக்சி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அருண் சிக்சி, " நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்தது, ஆனால் இரவில் பெய்த கனமழையால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. நேற்று சுமார் 200 மிமீ மழை பெய்தது, அது மேக வெடிப்பு போல் இருந்தது. இதனால் மிரிக்கில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் " என்று அவர் கூறினார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் இன்றும் தங்களது மீட்புப் பணியைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலச்சரிவால் இன்னும் பலரை காணவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சாலைவசதிகள் துண்டிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT