Published : 05 Oct 2025 05:58 PM
Last Updated : 05 Oct 2025 05:58 PM
டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 12 மணி நேரம் பெய்த தொடர் கனமழையால் 7 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகி உள்ள நிலையில் மீட்புப் பணிகள் அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை டார்ஜிலிங் செல்ல உள்ளார்.
டார்ஜிலிங்கில் சனிக்கிழமை அன்று கனமழை பொழிந்த நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மக்களின் வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் சில பகுதிகளுக்கான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமை இணைக்கும் முக்கிய சாலை இதில் சேதமடைந்துள்ளது.
டார்ஜிலிங்கின் சார்ஸ்லே, ஜெஸ்பீர்கான், மிரிக் பஸ்தி, தார் கான், மிரிக் லேக் ஏரியா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மற்றும் தேரிய பேரிடர் மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. நாளை (அக்.6) அவர் டார்ஜிலிங் செல்ல உள்ளார். அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் கண்டு மாநில அதிகாரிகளுடன் சேத விவரங்களை பெற உள்ளார்.
“பூடானில் கனமழை பொழிந்த காரணத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இது இயற்கை பேரிடர். இந்த சம்பவம் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி உள்ளேன். அங்கு நிலவும் சூழலை உன்னிப்பாக மாநில அரசு கவனித்து வருகிறது.
இடைவிடாமல் 12 மணி நேரம் தொடர்ந்து மழை பொழிந்துள்ளது. 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகல் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். சுற்றுலா பயணிகள் அதிகளவில் டார்ஜிலிங்கில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அவசரப்பட வேண்டாம். அவரவர் தங்கியுள்ள விடுதிகளில் பத்திரமாக இருங்கள். விடுதி உரிமையாளர்கள் சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் தொகை வசூலிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜக உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் உதவி வருவதாக அமித் ஷா கூறியுள்ளார். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் நிலவுவதாக மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தலங்கள் மூடல்: கனமழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பை அடுத்து டார்ஜிலிங்கில் பல்வேறு சுற்றுலா தலங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன. டைகர் ஹில், ராக் கார்டன் போன்ற சுற்றுலா தலங்கள் மற்றும் டாய் ட்ரெயின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
டார்ஜிலிங் நகரப்பகுதி மட்டுமல்லாது சிலிகுரி, ஜல்பைகுரி, கூச் பெஹர் உள்ளிட்ட பகுதிகளும் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ன. தசரா விடுமுறையை ஒட்டி டார்ஜிலிங்குக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்த நிலையில் நிலச்சரிவால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறை 91478 89078 என்ற தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது. பல இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுவதாக களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு அந்த பகுதியில் மண்சரிவு பாதிப்பு இருப்பதாக தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT