Published : 05 Oct 2025 08:21 AM
Last Updated : 05 Oct 2025 08:21 AM
காரைக்கால்: இந்திய கடலோர காவல் படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பல், காரைக்காலில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்திய கடலோர காவல் படையின் காரைக்கால் மையம் நிரவி பகுதியில் செயல்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில்
உள்ள அதானி கப்பல் துறைமுகத்தில் உள்ள தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல்கள், படகுகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த மையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், கோவா கப்பல் கட்டும் தளத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட ‘அக் ஷர்’ என்று பெயரிடப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா காரைக்கால் துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மத்திய பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் தீப்தி மொஹில் சாவ்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, கப்பலை இயக்கி
வைத்துப் பேசியதாவது: இந்திய கடலோர காவல் படையின் மேம்பாட்டுக்கு அக் ஷர் ரோந்துக் கப்பல் பெரிதும் உதவும். 60 சதவீதம் உள்நாட்டுப் பொருட்கள், தளவாடங்களை பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 11 ஆயிரம் கி.மீ. கடலோர பாதுகாப்பில், கடலோர காவல் படையின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, மீனவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், கடல்வழி கடத்தலை தடுத்தல், ஊடுருவலை தடுத்தல், கடல் பகுதி சூழல் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் கடலோர காவல் படையின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், கடலோர காவல் படை கூடுதல் இயக்குநர் ஜெனரல் கமாண்டர் டோனி மைக்கேல், காரைக்கால் மைய கமாண்டன்ட் சவுமய் சந்தோலா, புதிய ரோந்துக் கப்பல் கமாண்டன்ட் சுபேந்து சக்கரபோர்தி, காரைக்கால் ஆட்சியர் ரவி பிரகாஷ், மாவட்ட எஸ்.எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா, நாகை எஸ்.பி. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கப்பலில் உள்ள சிறப்பம்சங்கள்: இந்த ரோந்துக் கப்பல் 320 டன் எடை, 51 மீட்டர் நீளம் கொண்டது. மணிக்கு 27 நாட்டிக்கல் மைல் வேகத்தில் இயங்கும். 30 எம்எம் சிஆர்என்-91 துப்பாக்கிகள், ரிமோட் மூலம் இயக்கப்படக்கூடிய இயந்திர துப்பாக்கிகள், தானியங்கி மின் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT