Published : 05 Oct 2025 07:55 AM
Last Updated : 05 Oct 2025 07:55 AM
ஹைதராபாத்: தெலங்கானாவில் தசரா பண்டிகையை கொண்டாட மாமியார் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டது. அதோடு மருமகனுக்கு ஒரு சவரன் நகை பரிசாக வழங்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கும் வாரங்கலை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு நவராத்திரி பண்டிகை வந்ததால் புதுமண தம்பதியினர் கொத்தகோட்டாவிற்கு வரும்படி பெண் வீட்டார் அழைப்பு விடுத்தனர். இதையேற்று சுரேஷும் சிந்துவும் கொத்தகோட்டாவுக்கு சென்றனர்.
பெண் வீட்டார் சார்பில் புதுமண தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மருமகனுக்காக 101 வகையான உணவுகளை சமைத்து தருவதாக மாமியார் உறுதி அளித்திருந்தார். அதில் ஒன்று குறைந்தால்கூட ஒரு சவரன் நகை போட வேண்டும் என்று நகைச்சுவைக்காக மருமகன் நிபந்தனை விதித்தார்.
இந்த சூழலில் 60 இனிப்பு வகைகள், முறுக்கு, சீடை என 30 அரிசி மாவு வகைகள், 10 வகையான பொறியல் என மருமகனுக்கு பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டது. அப்போது இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை எண்ணியபோது 100 வகையான தின்பண்டங்களே இருந்தன. இதைத் தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளைக்கு ஒரு சவரன் நகை பரிசாக வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT