Last Updated : 04 Oct, 2025 06:24 PM

 

Published : 04 Oct 2025 06:24 PM
Last Updated : 04 Oct 2025 06:24 PM

ம.பி.யில் குழந்தைகள் மரணத்துக்கு இருமல் சிரப் காரணமா? - 19 ஆலைகளில் ஆய்வு தீவிரம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, ஆறு மாநிலங்களில் உள்ள இருமல் சிரப் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்கும் 19 உற்பத்தி நிலையங்களில் மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான (CDSCO) ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானில் ஒரு குழந்தை என 12 குழந்தைகள் இருமல் சிரப் உட்கொண்டதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, மருந்துகளின் தரத்தில் குறைபாடுகளை கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான செயல்முறையை பரிந்துரைக்கும் நோக்கில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) ஆய்வுகள் நேற்று (அக்டோபர் 3) தொடங்கியது.

மேலும், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் இறப்புகளுக்கான காரணத்தை கண்டறிவதற்கு தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட பலதரப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு, பல்வேறு மாதிரிகள் மற்றும் காரணிகளை பகுப்பாய்வு செய்து வருகிறது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் பரிசோதிக்கப்பட்ட ஆறு மருந்து மாதிரிகளிலும், மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (MPFDA) பரிசோதிக்கப்பட்ட மூன்று மருந்து மாதிரிகளிலும் கடுமையாக சிறுநீரகத்தை பாதிக்கும் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) மற்றும் எத்திலீன் கிளைக்கால் (EG) மாசுபாடுகள் இல்லாதது கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச அரசின் வேண்டுகோளின் பேரில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாவின் உற்பத்திப் பிரிவில் இருந்து சேகரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பின் மாதிரிகளை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சோதனை செய்தது.

‘வெள்ளிக்கிழமை மாலை தாமதமாக முடிவுகள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன... மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி டைஎதிலீன் கிளைக்கால் இருந்தது’ என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு குறிப்பிட்ட அந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனையைத் தடை செய்து, சந்தையில் இருந்து அதை அகற்ற உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x