Last Updated : 04 Oct, 2025 10:10 AM

1  

Published : 04 Oct 2025 10:10 AM
Last Updated : 04 Oct 2025 10:10 AM

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் - ட்ரம்ப் முயற்சிக்கு மோடி வரவேற்பு

புதுடெல்லி: தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம் என்றும், மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலும் இன்றுவரை தொடரும் காசா அவலமும்! கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக 65,000-க்கும் அதிகமான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ட்ரம்ப் வைத்த செக்! இந்நிலையில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் நமக்கு அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் (வாஷிங்டன் நேரப்படி) அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும்.

இதுவே ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிக தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்.” என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அடிபணிந்த ஹமாஸ்: ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பானது தன் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கத் தயார் என்றும், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி வரவேற்பு: “காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், அதற்கு தலைமை வகித்து அதிபர் ட்ரம்ப்பின் பணிகளை நாங்கள் வரவேற்கிறோம். இது மிக முக்கியமான முன்னேற்றம். மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்.” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதில் ட்ரம்ப்பின் உரிமை கோரல் ஏற்படுத்தியுள்ள கசப்பு ஆகியவற்றால் இந்தியா - அமெரிக்கா உறவில் நிலவிவரும் சலசலப்புகளுக்கு இடையே ட்ரம்ப்பின் முயற்சியை பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது இருநாட்டு நல்லுறவில் ராஜாங்க ரீதியாக ஒரு நல்ல நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் போல் ட்ரம்ப்பின் அமைதி ஏற்படுத்தும் முயற்சிக்கு கனடாவும் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் குழுவினர் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க முன்வந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும், இஸ்ரேலுடன், ஜனநாயக பாலஸ்தீனம் அதன் இறையான்மைக்கு எவ்வித பாதகமும் இன்றி அமைய வேண்டும் என்ற கருத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x