Published : 04 Oct 2025 07:44 AM
Last Updated : 04 Oct 2025 07:44 AM
புதுடெல்லி: காசோலையை வங்கிகளில் டெபாசிட் செய்தால் இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்கும் வசதியை வங்கிகள் இன்று முதல் அமல்படுத்த உள்ளன.
விரைவான மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட தீர்வு கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்றுவதற்கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் (அக்.4) தொடங்குவதாக அறிவித்துள்ளன.
அதன்படி, அக்டோபர் 4 முதல் டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் இனி இந்த புதிய முறையின் கீழ் ஒரே நாளில் பரிசீலிக்கப்பட்டு பணம் சில மணி நேரங்களுக்குள் வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தடுக்கவும், தாமதங்கள் அல்லது நிராகரிப்பு செய்யப்படுவதை தவிர்க்கவும் காசோலையில் அனைத்து விவரங்களையும் துல்லியமாக நிரப்பப்படுவதை உறுதி செய்யும்படி வாடிக்கையாளர்களை இந்த இரு தனியார் துறை வங்கிகளும் அறிவுறுத்தியுள்ளன.
பாசிட்டிவ் பே சிஸ்டத்தை பயன்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், சரிபார்ப்புக்கான முக்கிய காசோலை விவரங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரூ.50,000- க்கும் அதிகமான காசோலைகளை டெபாசிட் செய்வதற்கு குறைந்தது 24 மணி வேலை நேரத்திற்கு முன்னதாக கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு எண், காசோலை எண், தேதி, தொகை மற்றும் பயனாளியின் பெயரை வங்கிக்கு வழங்க வேண்டும்.
காசோலையை வழங்கியவுடன் வங்கிகள் இந்த விவரங்களைச் சரிபார்க்கும். தகவல் பொருந்தினால் காசோலைகள் கிளியர் செய்யப்படும்; இல்லையெனில் கோரிக்கை நிராகரிக்கப்படும். மேலும், பணம் எடுப்பவர் விவரங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பிராந்திய முகவரிகளுக்கு காசோலை விவரங்களை மின்னஞ்சல் செய்ய வேண்டும். வங்கிகள் காசோலையைப் பெறுவதற்கு முன்பு ஒப்புதல் செய்தியை அனுப்பும்.
மேலும், ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ள காசோலைகளுக்கு ஆர்பிஐ பாசிட்டிவ் பே-வை கட்டாயமாக்கியுள்ளது, அதே நேரத்தில் ரூ.50,000 க்கு மேலான காசோலைகளுக்கும் இது கட்டாயம் பரிந்துரைக்கப்படுகிறது. பாசிட்டிவ் பே-வின் கீழ் சரிபார்க்கப்பட்ட காசோலைகள் ரிசர்வ் வங்கியின் குறை தீர்வு முறையின் கீழ் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT