Published : 04 Oct 2025 07:22 AM
Last Updated : 04 Oct 2025 07:22 AM
புதுடெல்லி: உ.பி.யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் ராஜா பைய்யா என்கிற ராகுராஜ் பிரதாப் சிங். பிரதாப்கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏவாக இருந்தார். உ.பி.யில் ஆட்சிக்கு வரும் கட்சி எதிலும் சேராமலேயே அதன் அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு கொண்டவர்.
இவ்வாறு, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் அரசில் அமைச்சராக இருந்தார். 2018-ல் ஜன்சத்தா தளம் என்ற தனிக் கட்சி தொடங்கி அதன் சார்பில் பிரதாப்கர் மாவட்டம் குண்டா தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார். ராஜா பைய்யா நேற்று முன்தினம் தனது மாளிகையில் ஆயுத பூஜை கொண்டாடினார். இதில் சுமார் 200 வகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றை காண ஏராளமானோர் கூடினர். அவர்கள் பதிவுசெய்த காட்சிகள் வைரலாகி பார்ப்பவரை திகைக்க வைத்துள்ளன.
இவரது மனைவி பனவி குமாரி சிங் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இவர் கடந்த ஜூன் 3-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தனது கணவர் ராஜா பைய்யா சட்டவிரோத வெளிநாட்டு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், பொது அமைதிக்கு அவை அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அப்போது மறுப்பு தெரிவித்த ராஜா பைய்யா இப்போது அவற்றை பூஜைக்காக காட்சிப்படுத்தி உள்ளார்.
இந்த ஆயுதங்கள் அனைத்தும் தன்னுடையது மட்டுமின்றி குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடையது என்று தெரிவித்துள்ளார் ராஜா பைய்யா. அவரது நெருங்கிய கூட்டாளியும் உ.பி. எம்எல்சியுமான அக ஷ்ய் பிரதாப் சிங், ‘‘இந்த ஆயுதங்கள் சட்டவிரோதமானவை அல்ல. அனைத்தும் உரிமம் பெற்றவை’’ என்று கூறியுள்ளார். கடந்த வருடம் லக்னோவுக்கு ஒரு படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், தனது நண்பர் எனக் கூறி ராஜா பைய்யாவை அவரது வீட்டில் சந்தித்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT