Published : 04 Oct 2025 06:59 AM
Last Updated : 04 Oct 2025 06:59 AM
மீரட்: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ரயா பசர்க் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மசூதி மற்றும் 30 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் ரயா பசர்க் கிராமத்தில் வருவாய்த் துறையினர் நில அளவை நடத்தினர். அப்போது குளம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து மசூதி மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மசூதி நிர்வாகம் மற்றும் திருமண மண்டப நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து சம்பல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிஸ்னோய் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஆக்கிரமிப்பை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
எனினும், சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மசூதி மற்றும் திருமண மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்’’ என்றார். இந்நிலையில், கிராம மக்கள் கூறுகையில், ‘‘நன்கொடைகள் வசூலித்துதான் திருமண மண்டபத்தை கட்டினோம். தற்போது இடிக்கப்பட்டதால், திருமண மண்டபம் கட்டுவதற்கு வேறு நிலத்தை அரசு ஒதுக்கி தரவேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT