Published : 04 Oct 2025 06:33 AM
Last Updated : 04 Oct 2025 06:33 AM
ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்த முகாமை ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். பிஎஸ்எப், ராஜஸ்தான் ரைபிள்ஸ் படைகளை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்கள் ஆபரேஷன் சிந்தூரின்போது உலகத்துக்கு தெரியவந்தது. இதன்மூலம் பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமானது.
பாகிஸ்தான் மக்களுக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் அந்த நாட்டின் தீவிரவாதிகளை அழிப்பதில் ஈவு, இரக்கம் காட்ட முடியாது. ஆபரேஷன் சிந்தூரின்போது தீவிரவாத முகாம்களை மட்டுமே அழித்தோம். ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. இந்த போரில் பாகிஸ்தான் பெரும் தோல்வியை சந்தித்தது. பொறுமை, கருணை அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல் செய்தோம்.
ஆனால் அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட முடியாது. அந்த நாடு தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும். உலக வரைபடத்தில் அந்த நாடே இல்லாமல் போய்விடும்.
ஆபரேஷன் சிந்தூரின்போது எல்லைப் பகுதி மக்கள் ராணுவத்தோடு இணைந்து பணியாற்றினர். இந்த நேரத்தில் ராணுவத்தின் சார்பில் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT