Last Updated : 03 Oct, 2025 06:49 PM

3  

Published : 03 Oct 2025 06:49 PM
Last Updated : 03 Oct 2025 06:49 PM

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த கொடூர மனித உரிமை மீறல்களுக்கு பாக். பொறுப்பேற்க வேண்டும்: இந்தியா

புதுடெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும், மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 29 முதல் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்றைய போராட்டத்தின்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில், 12 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டாடியாலில் தொடங்கி முசாபராபாத், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி வரை இந்த போராட்டங்கள் பரவியுள்ளது.

போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மொபைல், இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நசீர் அஜீஸ் கான், இந்த விவகாரத்தில் அவசர தலையீட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த பின்னணியில், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடப்பது குறித்த செய்திகளை நாங்கள் அறிந்துள்ளோம். இந்த போராட்டங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் படைகள் கொடூர தாக்குதல்களை நடத்துவது குறித்தும் அறிந்துள்ளோம்.

இது பாகிஸ்தானின் இயல்பான அடைக்குமுறை அணுகுமுறை என்றும், வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்கிரமித்திருக்கும் இந்த பிரதேசங்களில் இருந்து வளங்களை பாகிஸ்தான் கொள்ளையடிப்பதால் ஏற்பட்ட இயல்பான எதிர்ப்புணர்வு என்றும் நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் அதன் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x