Published : 03 Oct 2025 01:07 PM
Last Updated : 03 Oct 2025 01:07 PM
புதுடெல்லி: தனது கணவரை விடுவிக்கக்கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த மாதம் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். வேறு சில அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த 26-ம் தேதி சோனம் வாங்சுக்கை லடாக் போலீஸார் கைது செய்தனர். பின்னர், ராஜஸ்தானின் ஜோத்பூர் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சோனம் வாங்சுக்குக்கு சொந்தமான இமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக்(எச்ஐஏஎல்) என்ற பெயரிலான இன்ஸ்டிடியூட்டுக்கு வெளி நாடுகளில் இருந்து ரூ.1.5 கோடி நிதி முறைகேடான வழியில் வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது. மேலும், சோனம் பாகிஸ்தான் சென்று வந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தனது கணவர் சோனம் வாங்சுக்கை விடுவிக்கக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சோனம் வாங்சுக்கின் தடுப்புக் காவலுக்கு எதிராக ஆட்கொணர்வு (ஹீபஸ் கார்பஸ்) மனு மூலம் உச்ச நீதிமன்றத்திடம் நிவாரணம் கோரியுள்ளேன். சோனம் வாங்சுக்கின் உடல்நிலை, அவர் இருக்கும் நிலை அல்லது தடுப்புக் காவலுக்கான காரணங்கள் குறித்து இதுவரை எனக்கு எந்த தகவலும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் 24 வன்முறைக்குப் பிறகு மத்திய அரசை கீதாஞ்சலி ஆங்மோ கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார். "இந்தியாவில் உண்மையிலேயே சுதந்திரம் இருக்கிறதா? 1857ம் ஆண்டில் இங்கிலாந்து அரசியின் உத்தரவின் பேரில், 24,000 பிரிட்டிஷ்காரர்கள், 1,35,000 இந்திய சிப்பாய்களைப் பயன்படுத்தி 30 கோடி இந்தியர்களை ஒடுக்கினர். இன்று, ஒரு டஜன் நிர்வாகிகள் 2400 லடாக் காவல்துறையினரை தவறாகப் பயன்படுத்தி உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் 3 லட்சம் லடாக் மக்களை ஒடுக்கி சித்ரவதை செய்கின்றனர்” என தனது எக்ஸ் பக்கத்தில் கீதாஞ்சலி ஆங்மோ குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், சோனம் வாங்சுக்கை விடுவிக்கக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கீதாஞ்சலி ஆங்மோ மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT