Published : 03 Oct 2025 09:25 AM
Last Updated : 03 Oct 2025 09:25 AM
போபால்: மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு இடங்களில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்பதற்காக நேற்று டிராக்டரில் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த டிராக்டரில் சிறுவர்களும் பயணித்துள்ளனர். சம்பல் நதியின் மீது உள்ள பாலத்தின் மீது டிராக்டர் நிறுத்தப்பட்டது. அப்போது 12 வயது சிறுவன் திடீரென இன்ஜினை ஆன் செய்ததால் வாகனம் திடீரென முன்னேறி சம்பல் நதியில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் 12 சிறுவர்கள் தண்ணீரில் விழுந்த நிலையில், 11 பேர் மீட்கப்பட்டனர். ஒருவரை காணவில்லை. காணாமல் போன சிறுவனை போலீஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுபோல காந்த்வா மாவட்டம், பந்தனா நகருக்கு அருகே உள்ள அர்த்லா மற்றும் ஜம்லி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் துர்கா சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க டிராக்டரில் சென்றுள்ளனர்.
அப்போது அந்த டிராக்டர் அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாநில பேரிடர் மீட்புப் படையினர் 8 சிறுமிகள் உட்பட 11 பேரின் சடலங்களை மீட்டனர். கிரேன் உதவியுடன் அந்த டிராக்டரை மீட்ட அவர்கள், காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிக சுமைகாரணமாக அந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் சிக்கி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முதல்வர் இரங்கல்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
“காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மன உறுதியை வழங்க வேண்டும் என்றும் துர்கா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT