Published : 03 Oct 2025 06:48 AM
Last Updated : 03 Oct 2025 06:48 AM
புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வருடாந்திர விஜயதசமி விழாவில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, “பழங்காலத்தில் நமது சமுதாயத்தில் சிறந்த தனிநபர்களை உருவாக்கும் முறை இருந்தது. இது வெளிநாட்டினரின் ஊடுருவல் காரணமாக அழிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த முறையை மீண்டும் உருவாக்கியது. கடந்த 100 ஆண்டுகளாக, சங்கத்தின் நிர்வாகிகள் எந்தச் சூழ்நிலையிலும் அந்த முறையைத் தொடர்ந்து பேணிக் கொண்டு வந்துள்ளனர்.
அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரி கொள்கை அவர்கள் நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டது. உலக நாடுகள் ஒன்றின் மீது ஒன்று சார்ந்தே இயங்குகிறது. அதேநேரம் இந்த சார்பு கட்டாயமாக மாறக்கூடாது. அதனால், நாம் சுதேசி வழியைக் கடைப்பிடித்து, தன்னிறைவு மீது கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம், நமக்குத் தோழமையாக உள்ள அனைத்து நாடுகளுடனும் தூதரக உறவுகளைப் தொடர வேண்டும்” என்றார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “டாக்டர் மோகன் பாகவத் உரை ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. நாட்டை கட்டமைப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்த முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார். மேலும் பல புதிய உச்சங்களை அடைந்து மகத்துவம் பெறும் திறன் நமது மண்ணுக்கு உள்ளது என்றும் இதனால் முழு உலகமும் பயன் பெறும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்” என கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் 100 ரூபாய் நினைவு நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT