Published : 02 Oct 2025 05:19 PM
Last Updated : 02 Oct 2025 05:19 PM
லே: செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது.
செப்டம்பர் 24 அன்று லே நகரில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள லடாக் மலைப்பகுதி மேம்பாட்டு தன்னாட்சி கவுன்சில் அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசிய அவர்கள், சிஆர்பிஎப் வேன் உட்பட பல வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை விரட்டினர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு நுப்ராவின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஐஏஎஸ் அதிகாரி முகுல் பெனிவால் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைக்கான காரணங்கள் குறித்த விசாரணை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும், சம்பவம் தொடர்பான தகவல் உள்ள நபர்கள் அக்டோபர் 4 முதல் 18 வரை விசாரணை அதிகாரியிடம் தானாக முன்வந்து அறிக்கை அல்லது ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
லே நகரில் செப்டம்பர் 24, 2025 அன்று வன்முறை போராட்டங்களின் போது போலீஸ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட நான்கு பேரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக அமைப்புகள் மற்றும் லே அபெக்ஸ் பாடி மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT