Last Updated : 02 Oct, 2025 12:48 PM

 

Published : 02 Oct 2025 12:48 PM
Last Updated : 02 Oct 2025 12:48 PM

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

புதுடெல்லி: எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாதம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா வருவதாகவும், அப்போது புதினின் பயணம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத் திட்டத்தின்படி ரஷ்ய அதிபர் புதின், இந்தியா வரும்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு இருதரப்புக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதினின் இந்திய பயணம் ஒருநாள் பயணமா அல்லது இரண்டு நாள் பயணமா என்பது இறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணி தற்போது நடைபெற்று வருவதாக தகவல். கடைசியாக கடந்த 2021-ல் புதின் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு ராணுவத்தின் செயல்பாடு, வணிக ரீதியான உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும், புதினும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருநாட்டுக்கு இடையிலான உறவை மதிப்பாய்வு செய்யும் வகையில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையில் ஆண்டுதோறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது உண்டு. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கடந்த மாதம் சீனாவில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். இருவரும் காரில் அமர்ந்தபடி நீண்ட நேரம் பேசியது கவனம் ஈர்த்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தது அமெரிக்கா. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என சொல்லி இந்த கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். தற்போது இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது அமெரிக்கா.

ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான உறவு இருநாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது சர்வதேச அளவிலான அமைதி, ஸ்திரத்தன்மை சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். டிசம்பரில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x