Published : 01 Oct 2025 09:49 PM
Last Updated : 01 Oct 2025 09:49 PM
புதுடெல்லி: “ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டதிலிருந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கே.பி ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார். அவருடன், அமைப்பின் பல தலைவர்களும் சிறைக்குச் சென்றனர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழா புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: “ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டுகால மகத்தான பயணம் என்பது தியாகம், தன்னலமற்ற சேவை, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒழுக்கத்திற்கு ஒரு அசாதாரண எடுத்துக்காட்டு. நாளை விஜயதசமி. இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி, அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, பொய்களுக்கு எதிரான உண்மையின் வெற்றி, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு பண்டிகை. 100 ஆண்டுகளுக்கு முன்பு தசராவில் ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி. சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காணும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைத்திருக்கிறது.
இந்திய வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் ஒரு நாணயத்தில் செதுக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த நாணயத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் "ராஷ்ட்ரே ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ரய, இதம் ந மாமா" என்ற ஸ்லோகமும் இடம்பெற்றுள்ளது. இதன் அர்த்தம் "அனைத்தும் தேசத்திற்கு அர்ப்பணம், அனைத்தும் தேசத்துகு, எதுவும் என்னுடையது அல்ல" என்பதாகும்.
ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டதிலிருந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கே.பி ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார். அவருடன், அமைப்பின் பல தலைவர்களும் சிறைக்குச் சென்றனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, ஹைதராபாத் நிஜாம்களின் கைகளில் ஆர்.எஸ்.எஸ். மீண்டும் சிக்கி துன்பப்பட்டது. கோவா மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் சுதந்திரத்தின் போதும் ஆர்.எஸ்.எஸ். தியாகம் செய்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தனது நம்பிக்கையில் உறுதியாக இருந்தது: 'முதலில் தேசம்' மற்றும் 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்பதே அதன் நோக்கம்.
ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளின் மீது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை ஒருபோதும் கசப்புணர்வை ஏற்படுத்தவில்லை. அது அவசரநிலையை எதிர்ப்பதற்கான பலத்தை மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து அளித்தது.
சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். மைய நீரோட்டத்திற்கு வருவதைத் தடுக்க எண்ணற்ற சதித்திட்டங்கள் இருந்தன. சில சமயங்களில் நாம் தற்செயலாக நம் பற்களால் நாக்கைக் கடிக்கிறோம் அல்லது நசுக்குகிறோம். ஆனால் அதற்காக நாம் பற்களை உடைக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அமைப்புக்கு எதிரான அனைத்து தடைகள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ் யாரையும் ஒருபோதும் வெறுக்கவில்லை. ஏனென்றால் நாம் சமூகத்திலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, அதன் ஒரு பகுதியினர் என்பதை நாம் அறிவோம். ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்களுக்கு நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி தெரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT