Published : 01 Oct 2025 09:45 AM
Last Updated : 01 Oct 2025 09:45 AM
பரேலி: உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் மதத் தலைவர் தவுகீர் ராஸாவுக்குத் தொடர்புடைய 8 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கான்பூர் மாவட்டத்தில் உள்ள ராவத்பூர் என்ற இடத்தில், கடந்த 4-ம் தேதி மிலாடி நபி பண்டிகையையொட்டி, ‘ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும் இந்த வாசகம் தாங்கிய பேனர்களையும் அங்கு நடைபெற்ற ஊர்வலத்தில் முஸ்லிம்கள் கொண்டு சென்றனர்.
இதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, பரேலி மாவட்டத்தில் முஸ்லிம்கள் கடந்த வாரம் பேரணி நடத்தினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.
இந்த பேரணியை துாண்டி விட்டதாகக் கூறி, உள்ளூர் முஸ்லிம் மதகுருவும், இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தவுகீர் ராஸா கான் உட்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மதகுரு தவுகீர் ராஸா கானின் நெருங்கிய கூட்டாளி நதீமை போலீஸார் நேற்று முன்தினம் கைது போலீஸார் செய்துள்ளனர்.
இந்நிலையில் பரேலி மாவட்ட வளர்ச்சி ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பழைய ஜகத்பூர் மற்றும் ஜகத்பூரிலுள்ள ஃபைக் என்கிளேவ் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 8 கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமலும், ஆக்கிரமிப்பு செய்தும் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த கட்டிடங்களுக்கும், மதகுரு தவுகீர் ராஸாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து 8 கட்டிடங்களை இடிக்க கான்பூர் மாவட்ட நிர்வாகமும், பரேலி வளர்ச்சி ஆணையமும்(பிடிஏ) முடிவு செய்துள்ளது. தவுகீர் ராஸாவின் கூட்டாளிகள் சதாம், ஆதிக் அகமது, பர்ஹத், முகமது ஆரிப் உள்ளிட்டோருக்குச் சொந்தமான கட்டிடங்கள் இவை எனத் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT