Published : 01 Oct 2025 09:04 AM
Last Updated : 01 Oct 2025 09:04 AM
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார்.
‘‘தீவிரவாதம் இல்லாத அமைதி மண்டலமாக காசா மாற்றப்படும். ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும். பாலஸ்தீனர்களை கொண்ட குழுவின் தலைமையில் காசா இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்கப்படாது’’ என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்பின் போர் நிறுத்த திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் நேற்று கூறும்போது, “அமெரிக்காவின் அமைதி திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆயுதங்களை கைவிட வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள். இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்துள்ள அமைதி திட்டத்தை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம்.
இத்திட்டம் பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். காசா மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை ஏற்படுத்தவும் அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT