Last Updated : 30 Sep, 2025 02:40 PM

3  

Published : 30 Sep 2025 02:40 PM
Last Updated : 30 Sep 2025 02:40 PM

அக்.1-ல் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உடன் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம்

புதுடெல்லி: அக்டோபர் 1-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1-ம் தேதி புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் உரையாற்றுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னார்வலர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு கலாச்சார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு போன்ற பண்புகளை மக்களிடையே கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நாட்டை மறுகட்டமைப்பதற்கான இயக்கத்தில் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பாக ஆர்எஸ்எஸ் இருந்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும், தர்மத்தின் அடிப்படையிலான முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த அமைப்பு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

நாட்டுப்பற்று மற்றும் தேசியம் குறித்த நற்பண்புகளை உருவாக்குவதையே இந்த அமைப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பக்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல், தலைமைப்பண்பு போன்ற குண நலன்களை வளர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு ஸ்வயம்சேவகர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கல்வி, சுகாதாரம், சமூக நலன் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளது. புயல், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பிற அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பங்கேற்புடன் உள்ளூர் சமுதாயத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் பங்காற்றி வருகிறது. ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அதன் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவதாக அமைந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், "100 ஆண்டுகள் முன்பாக, ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்ட போது, தேசம் பலநூற்றாண்டுக்கால அடிமைத்தளைகளில் சிக்கியிருந்தது. இந்த பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான அடிமைத்தனம் காரணமாக, நமது சுயமரியாதைக்கும், தன்னம்பிக்கைக்கும் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது.

உலகின் மிகத் தொன்மையான நாகரிகம், தனது அடையாளத்தைத் தொலைத்து விட்டு அதைத் தேடுவதில் தவித்துக் கொண்டிருந்தது. நாட்டுமக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகியிருந்தார்கள். ஆகையால் தேசத்தின் விடுதலையோடு கூடவே, தேசத்தின் கருத்தியல் அடிமைத்தனத்தனத்திலிருந்தும் விடுதலை பெற்றாக வேண்டியது மிக மகத்துவமானதாக இருந்தது.

இந்த நிலையில்தான், பெருமதிப்பிற்குரிய டாக்டர். ஹெட்கேவார், இந்த விஷயம் குறித்து ஆழமாக ஆலோசித்த பிறகு, இந்த பகீரதப் பணியை நிறைவேற்றும் பொருட்டு, அவர் 1925ஆம் ஆண்டு, விஜயதசமி நன்னாளில் ராஷ்ட்ரீய சுயம்சேவக சங்கத்தை நிறுவினார். அவர் காலமான பிறகு, பெருமதிப்பிற்குரிய குருஜி, தேச சேவையின் இந்த மகா வேள்வியை முன்னெடுத்துச் சென்றார்.

இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 100 ஆண்டுகளாக, களைப்படையாமல், தடைப்படாமல், தேச சேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகையால் தான், தேசத்தில் எங்கே இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் சுயம்சேவர்கள் அனைவருக்கும் முன்னதாக அங்கே சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

லட்சோபலட்சம் சுயம்சேவகர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும், தேசத்துக்கே முதன்மை என்ற இந்த உணர்வு தான் எப்போதும் முதன்மையானதாக இருக்கிறது. தேச சேவை என்ற மாபெரும் வேள்வியிலே, தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து வரும் ஒவ்வொரு சுயம்சேவகருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் அர்ப்பணம் செய்கிறேன்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x