Published : 30 Sep 2025 07:48 AM
Last Updated : 30 Sep 2025 07:48 AM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை அக்டோபர் 3-ம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினம் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் அக்டோபர் 3-ம் தேதி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு ஜம்மு காஷ்மீரில் பட்காம், நாக்ரோட்டா தொகுதிகள், ராஜஸ்தானில் அன்டா தொகுதி, ஜார்க்கண்டில் காட்ஷிலா தொகுதி, தெலங்கானாவின் ஜுபிளி ஹில்ஸ் தொகுதி, பஞ்சாபில் தரண் தரண் தொகுதி, மிசோரமில் தம்பா தொகுதி, ஒடிசாவில் நவுபாடா தொகுதி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹார் கள நிலவரம்: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடத்தி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் என்டிஏ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 102, பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மீதமுள்ள தொகுதிகள் என்டிஏ கூட்டணியில் உள்ள எல்ஜேபி, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன.
கடந்த 2020 பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி 144, காங்கிரஸ் 70, மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இந்த முறை இண்டியா கூட்டணியில் இதே எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
கடந்த 2020-ம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளைக் கைப்பற்றியது. எனினும் கடந்த 2022-ம் ஆண்டில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் ஆர்ஜேடியில் இணைந்தனர். வரும் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி மீண்டும் 20 தொகுதிகளில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
470 மத்திய பார்வையாளர்கள்: பிஹார் தேர்தல் மற்றும் 8 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக 470 மத்திய பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில் 320 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். 60 பேர் ஐபிஎஸ், 90 பேர் ஐஆர்எஸ் அதிகாரிகள் ஆவர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தலின்போது நேர்மை, நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு மத்திய பார்வையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT