Published : 30 Sep 2025 08:54 AM
Last Updated : 30 Sep 2025 08:54 AM
புதுடெல்லி: இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்ளார். இந்நூலை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:பிரதமர் மெலோனியின் வாழ்க்கை ஒருபோதும் அரசியல் பற்றியதாகவோ அதிகாரத்தைப் பற்றியதாகவோ இருந்ததில்லை. இது அவருடைய தைரியம், உறுதிப்பாடு, பொது சேவை, இத்தாலியர்களின் அர்ப்பணிப்பு பற்றியது. பிரதமர் மெலோனியின் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் உள்ளன. இதனால் இந்த நூல் மிகவும் சிறப்பாகிறது.
அவரது பயணம் ஊக்க மூட்டும் ஒன்றாகவும் வரலாற்றுப் பெருமை வாய்ந்ததாகவும் உள்ளது. பிரதமராக மெலோனி பொறுப்பேற்றபோது, அவர் எப்படி செயல்படுவார் என்பதில் சில ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் சந்தேகம் எழுப்பினர். ஆனால், நாட்டு நலனுடன் உலக நலனையும் கவனத்தில் கொண்டு அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் மெலோனியின் வளர்ச்சியையும் தலைமைத்துவத்தையும் பல வழிகளில் புரிந்து கொண்டு பாராட்டலாம். அதில், அவரது வாழ்க்கை கதைக்கும் இந்திய பாரம்பரியங்களில் ஆயிரம் ஆண்டுகளாக வணங்கப்படும் நாரி சக்தி என்ற தெய்வீக பெண் சக்திக்கும் வலுவான தொடர்பு இருப்பதை நான் காண்கிறேன்.
இந்த நூல், இக்கால அரசியல் தலைவர் மற்றும் தேசபக்தரின் புத்துணர்ச்சி தரும் வாழ்க்கைக் கதை என பாராட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நூலுக்கு முன்னுரை எழுதியது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஆகும். இது ஒரு சுயசரிதை மட்டுமல்ல, அது அவரது மனதின் குரல் (மன் கி பாத் - வானொலி நிகழ்ச்சி பெயர்) ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT