Published : 30 Sep 2025 06:08 AM
Last Updated : 30 Sep 2025 06:08 AM
புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதிகரித்துள்ளது. இதுகுறித்து 'தி லான்செட்' இதழில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 33 ஆண்டுகளில் 26% அதிகரித்துள்ளது.
1990-ல் 1 லட்சம் மக்கள்தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு 21% அதிகரித்துள்ளது. அதேவேளையில் அமெரிக்கா மற்றும் சீனாவில் 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர் கூறுகையில், ‘‘அமெரிக்கா மற்றும் சீனாவில் புற்றுநோய் பாதிப்பும் உயிரிழப்பும் கணிசமாக குறைந்ததற்கு, இவ்விரு நாடுகளிலும் வலுவான புகையிலை கட்டுப்பாடு, அனைவருக்கும் தடுப்பூசி, ஒழுங்கமைக்கப்பட்ட பரிசோதனை காரணமாக உள்ளது.
அதிக புகையிலை பயன்பாடு, உடல் பருமன், நோய்த்தொற்றுகள் போன்ற ஆபத்து காரணிகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதேவேளையில் புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுவது குறைவாக உள்ளது. எனவே புற்றுநோய் ஆபத்தை தடுக்கும் உத்திகளை நாம் அவசரமாக வலுப்படுத்த வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT