Published : 29 Sep 2025 06:33 PM
Last Updated : 29 Sep 2025 06:33 PM
பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 4 பெண்கள் பிரஜ்வலுக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்எல்ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்த்தது. ‘‘இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அரசு தரப்பால் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. அதற்கான சாட்சியங்களும், ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது.” என நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 2-ம் தேதி தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சாகும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் நீதிபதி சந்தோஷ் பட் அறிவித்தார். இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், "பாதிக்கப்பட்டவரின் புகாருக்கும் சாட்சியத்துக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரை புகார் அளிக்குமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்தி உள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு படுக்கையில் காணப்பட்டதாகக் கூறப்படும் கறை ஆதாரங்கள் நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT