Published : 29 Sep 2025 07:24 AM
Last Updated : 29 Sep 2025 07:24 AM
புதுடெல்லி: பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடைபெற்ற போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
2023 மே முதல் 2025 ஜூலை வரையிலான காலகட்டத்தில் எப்டி, பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் செயலற்ற கணக்குகளில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, மூத்த குடிமக்கள், மைனர், இறந்தவர்கள் மற்றும் அரிதாகவே இருப்பை சரிபார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து அவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
செயலற்ற மூடப்பட்ட கணக்குகளிலிருந்து பெருமளவிலான பணம் சிங்லாவின் தனிப்பட்ட எஸ்பிஐ வங்கி கணக்கிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதை அவர் பங்கு வர்த்தகம், கிரிப்டோகரன்ஸி, ஆன்லைன் சூதாட்ட தளங்களில் முதலீடு செய்துள்ளார். முதலில் அதிக அளவில் லாபம் கிடைத்த போதிலும் அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்துள்ளார்.
இழந்ததை பிடிக்க தனது பந்தயங்களை இரட்டிப்பாக்கி சிங்லா கடும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளார். மோசடி தெரிந்ததும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹிதேஷ் சிங்லா கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் ஓடும் ரயிலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இப்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் அமைப்புகளும் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT