Published : 29 Sep 2025 07:16 AM
Last Updated : 29 Sep 2025 07:16 AM
புதுடெல்லி: எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு திரும்புவதைத் தடுக்க, அந்நாட்டு வலதுசாரி அமைப்பினர் இன ரீதியில் பிரச்சாரம் தொடங்கியது தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசா கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்படும் என கடந்த வாரம் அறிவித்தார்.
இதையடுத்து, விடுமுறையில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தின. இதனால், ஏராளமானோர் ஒரே நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்ததால் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது.
இதனிடையே, எச்1பி விசா வைத்திருக்கும் இந்திய ஊழியர்கள் திரும்புவதைத் தடுக்க, வலது சாரி அமைப்பின் (4சான்) பயனாளர்கள், ‘ஆபரேஷன்க்ளாக் தி டாய்லெட்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு பயனாளர் “எச்1பி செய்திக்குப் பிறகு இந்தியர்கள் இப்போதுதான் விழித்துக் கொள்கிறார்கள்.
அவர்களை இந்தியாவிலேயே வைத்திருக்க விரும்புகிறீர்களா? விமான முன்பதிவு முறையைத் தடை செய்யுங்கள்” என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், “100 இருக்கைகளின் முன்பதிவை பூட்டி விட்டோம்’’ என பதிவிட்டிருந்தார். அதாவது, டிக்கெட் முழுவதும் முன்பதிவு செய்யாத நிலையிலும், டிக்கெட் கிடைக்காத நிலை இருந்தது.
அமெரிக்காவின் வலதுசாரி அமைப்பினர் விமான நிறுவனங்களின் தளத்தில் முன்பதிவு செய்வது போல நடித்துள்ளனர். ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. இதனால், இந்தியர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருந்தது.
இதுகுறித்து ஆஸ்டின் நகரில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர் அம்ருதா தமனம் கூறும்போது, “ட்ரம்ப் அறிவிப்பால் விஜயவாடாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமான டிக்கெட் பதிவு செய்வதற்கு முயன்றேன். அப்போது இணையதளம் தொடர்ந்து முடங்கியது. இதனால், கத்தார் ஏர்வேஸில் 2 ஆயிரம் டாலர் கூடுதலாக செலவழித்து டிக்கெட் முன்பதிவு செய்தேன். இது வழக்கமான கட்டணத்தைப்போல 2 மடங்கு அதிகம் ஆகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT