Published : 29 Sep 2025 08:19 AM
Last Updated : 29 Sep 2025 08:19 AM
புதுடெல்லி: வரும் பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மத்திய அரசின் முயற்சியால் கொல்கத்தாவின் துர்கா பூஜை யுனெஸ்கோவின் கலாச்சார பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதேபோல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை கொண்டாட உள்ளோம். நமது தேசத்தந்தை சுதேசி கொள்கையை வலியுறுத்தினார். அவற்றில் காதி மிகவும் முக்கியமானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்துக்குப் பிறகு காதி மீதான ஆர்வம் குறைந்தது. மத்திய அரசின் முயற்சிகளால் கடந்த 11 ஆண்டுகளாக காதி பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. வரும் காந்தி ஜெயந்தி நாளில் குறைந்தபட்சம் ஒரு காதி பொருளை வாங்க வேண்டுகிறேன்.
இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த யாழ் நேச்சுரல்ஸ் ஓர் உதாரணம் ஆகும். அந்த நிறுவன உரிமையாளர்கள் அசோக் ஜெகதீசன், பிரேம் செல்வராஜ் ஆகியோர் கார்ப்பரேட் வேலையை துறந்து புதிய முயற்சியை மேற்கொண்டனர். புற்கள் மற்றும் வாழை நார்களிலிருந்து யோகா பாய்களை அவர்கள் உருவாக்கினர். மூலிகை சாயங்களால் துணிகளுக்கு சாயம் பூசினர். இந்த புதிய முயற்சி மூலம் சுமார் 200 குடும்பங்களுக்கு அவர்கள் வேலைவாய்ப்பை வழங்கி உள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்: அடுத்த சில நாட்களில் விஜயதசமியை கொண்டாட உள்ளோம். இந்த நாளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு 100-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியா அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்தது. இந்த சூழலில் டாக்டர் ஹெட்கேவர் கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தை நிறுவினார்.
அவரது மறைவுக்கு பிறகு பரம் பூஜ்ய குருஜி தேசத்துக்கு சேவை செய்யும் மகத்தான பணியை முன்னெடுத்து சென்றார். கடந்த 100 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பு இடைவிடாமல் தேச சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அதன் தொண்டர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டுமே வாங்குவேன் என்று ஒவ்வொரு இந்தியரும் உறுதியேற்க வேண்டும். நமது பாதை சுதேசி பாதையாக இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நாம் சுயசார்பை எட்ட வேண்டும். பண்டிகை நாளில் நமது வீடுகளை சுத்தம் செய்கிறோம். அதேநேரம் நமது தெருக்கள், சுற்றுப்புறங்கள், சந்தைகள், கிராமங்கள், நகரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது நமது தலையாய கடமை ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கடற்படை அதிகாரிகளுடன் உரையாடல்: மனதின் குரல் நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி கூறும்போது, “கடலில் சுமார் 50,000 கி.மீ. பயணம் செய்து கடற்படை பெண் அதிகாரிகள் தில்னா, ரூபா சாதனை படைத்துள்ளனர். அவர்கள் தங்களது சாகச பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார்கள்’’ என்றார். புதுச்சேரியை சேர்ந்த ரூபாவுடன் பிரதமர் பேசியபோது தமிழில் வணக்கம் கூறினார். இதைத் தொடர்ந்து லெப்டினென்ட் கமாண்டர் ரூபா அழகிரிசாமி கூறியதாவது:
கடந்த 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்தேன். எனது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர். அம்மா புதுச்சேரியை சேர்ந்தவர். விமானப் படையில் தந்தை பணியாற்றினார். அவரை பின்பற்றி நான் கடற்படையில் இணைந்தேன். பாய்மர படகில் இருவர் மட்டுமே பயணம் செய்தோம். 3 புயல்களை எதிர்கொண்டோம்.
சில நேரங்களில் 3 மாடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. அந்த அலைகளை எதிர்கொண்டோம். உறையவைக்கும் குளிர், கடுமையான வெப்பம், சூறாவளி காற்றை சமாளித்தோம். அண்டார்டிகாவில் பயணம் செய்தபோது அங்கு வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸாக இருந்தது. அண்டார்டிகா குளிரை சமாளிக்க 7 அடுக்கு ஆடைகளை அணிந்தோம். இவ்வாறு ரூபா அழகிரிசாமி தெரிவித்தார்.
கடற்படை லெப்டினென்ட் கமாண்டர் தில்னா கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டில் கடற்படையில் சேர்ந்தேன். நான் கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவள். எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். எனது அம்மா இல்லத்தரசி. எனது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றுகிறார்.
கடந்த 2024 -ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி கோவாவில் இருந்து கடல் பயணத்தை தொடங்கி கடந்த மே 29-ம் தேதி கரைக்கு திரும்பினோம். 238 நாட்கள் சுமார் 50,000 கி.மீ. கடலில் பயணம் செய்தோம். பாயிண்ட் நீமோவில் தேசிய கொடியை ஏற்றி சாதனை படைத்தோம். பாய்மரப் படகில் அங்கு சென்ற முதல் இந்தியர், முதல் ஆசியர் என்ற பெருமையை பெற்றோம். இவ்வாறு தில்னா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT