Published : 29 Sep 2025 07:40 AM
Last Updated : 29 Sep 2025 07:40 AM
கொல்கத்தா: நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பிரம்மாண்டமான வகையில் துர்கா பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பஹராம்பூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலில், அசுரன் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காக்ரா சமஷான்கட் துர்கா பூஜை கமிட்டி நிர்வாகி பிரதீக் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்துள்ளார். அத்துடன் எச்-1பி விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளார். இதன் மூலம் இந்தியர்கள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும், நமது பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பை நண்பராக பார்க்கிறார். ஆனால், அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். அதனால், ட்ரம்பை அசுரனாக சித்தரித்து துர்கா பூஜை பந்தலில் வைத்துள்ளோம்’’ என்றார்.
ட்ரம்ப் உருவத்தில் அசுரன் சிலையை உள்ளூர் கலைஞர் அசிம் பால் உருவாக்கி உள்ளார். அவரது முகம், தலைமுடி, புருவம் உட்பட முகபாவத்தை அந்த சிலையில் தத்ரூபமாக கொண்டு வந்துள்ளார். இந்த சிலை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT