Published : 28 Sep 2025 03:52 PM
Last Updated : 28 Sep 2025 03:52 PM

கரூர் துயரத்துக்கு விஜய்யும், அவரது கட்சியினரும்தான் பொறுப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

ராமநாதபுரம்: கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யும், அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும், என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “கரூரில் சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. சிறு அசம்பாவிதமும், சிறு காயமும் அடையாமல் மக்கள் வருகை தந்து விட்டு அவரவர் ஊர்களுக்கு திரும்பபிச் சென்றார்கள். காரணம் வந்தவர்கள் ஒரு ஒழுங்கை கடைப்பிடித்தார்கள்.

நடிகர் அரசியலில் குதிக்கும்போது அவரது கூட்டத்திற்கு ரசிகர்கள் தான் வருகிறார்களே தவிர, அரசியல் மயமாக்கப்பட்ட தொண்டர்கள் வருவதில்லை. கரூர் சம்பவம் மிகவும் துயரமான சம்பவம். கரூரில் பாதுகாப்பு குறைபாட்டில் தான் சம்பவம் நடைபெற்றது என்று கூறுவது அபாண்டமானது மட்டுமின்றி காழ்புணர்ச்சியுடன் கூடிய குற்றச்சாட்டு. காவல்துறையினரால் தான் இந்த சம்பவம் நடைபெற்றது என்று கூறுவதும் மிகப் பெரிய அநியாயம், அக்கிரமம்.

கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யும் அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலின் இரவோடு இரவாக தனது உடல்நிலையையும் கூட கருத்தில் கொள்ளாமல் கரூர் சென்று உரிய நிவாரண நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றார். நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x