Last Updated : 28 Sep, 2025 12:50 PM

 

Published : 28 Sep 2025 12:50 PM
Last Updated : 28 Sep 2025 12:50 PM

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவியை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதேபோல உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சியின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, “தமிழகத்தின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x