Published : 28 Sep 2025 10:00 AM
Last Updated : 28 Sep 2025 10:00 AM
அமராவதி: ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
தேர்தல் வாக்குறுதிகளை கூட்டணி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. சூப்பர் சிக்ஸ் திட்டம் ஆந்திராவில் சூப்பர் வெற்றி. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று மாத உதவி தொகைகளை நேரில் சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதில் எனக்கு முழு திருப்தியாக உள்ளது.
தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணியை உறுதி செய்தோம். மக்கள் முழு வெற்றியை அளித்தனர். அவர்களுக்கு நன்றி கடன் செலுத்துவது போல் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படாத மேலும் பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். விரைவில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கேப் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இதற்கு ஆட்டோ ஓட்டுநர்களின் சேவை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆந்திராவில் 2,90,234 பேர் பயனடைவர். இதற்காக ரூ.435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்கியது. எனது தலைமையிலான அரசு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்குகிறது. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT