Published : 28 Sep 2025 02:16 AM
Last Updated : 28 Sep 2025 02:16 AM
புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த அவதார்-செராமவுண்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் 2016-ல் 13%-மாக இருந்த பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% தொட்டுள்ளது. இது சமூகத்தில் முற்போக்கான நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த எண்ணிக்கை 2020-ல் 14%, 2021-ல் 15%, 2022-ல் 17%, 2023-ல் 19%, 2024-ல் 19%-ஆக இருந்தது.
சிறந்த நிறுவனங்களில் மொத்த பணியாளர்களின் அடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 35.7% -ஆக நிலையானதாக இருந்தது. குறிப்பாக, தொழில்முறை சேவைகள் துறையில் பெண்களின் பங்கு 44.6% என்ற அளவில் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து, ஐடிஇஎஸ் (41.7%), மருந்து (25%), எப்எம்சிஜி (23%), உற்பத்தி (12%) ஆகிய துறைகள் உள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 125 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 15 சதவீதம் ஐடி சேவை நிறுவனங்கள், 9 சதவீதம் உலகளாவிய திறன் மையங்கள். உற்பத்தித் துறை 9 சதவீதத்தையும், மருந்துகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தலா 5 சதவீதத்தையும் கொண்டுள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கான முதல் சிறந்த 10 நிறுவனங்களில் அக்சென்ஸர், ஆக்ஸா எக்ஸ்எல் இந்தியா பிசினஸ் சர்வீசஸ், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ் வேதாந்தா லிமிடெட், ஈஒய், கேபிஎம்ஜி, மாஸ்டர்கார்டு இன்கார்பரேஷன், ஆப்டம் குளோபல் சொல்யூஷன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், ப்ராக்டர் & கேம்பிள், டெக் மஹிந்திரா, விப்ரோ ஆகியவை அடங்கும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT