Published : 27 Sep 2025 06:55 PM
Last Updated : 27 Sep 2025 06:55 PM
புதுடெல்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லடாக் மக்களுக்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், "லடாக்கில் நிலைமையை அரசு மோசமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதையும் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. லடாக் மக்களின் விருப்பங்களுக்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
ஓர் ஆண்டுக்கும் மேலாக, லடாக்கில் கொந்தளிப்பு நிலவுகிறது, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற லடாக் மக்களின் கூக்குரல்களை பொறுமையாகக் கேட்பதற்குப் பதிலாக, மோடி அரசு வன்முறையால் பதிலளிக்கிறது. பாஜக இந்தப் பகுதிக்கு ஆறாவது அட்டவணை அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்து இருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த வாக்குறுதி முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் லடாக்கில் அமைதியைத் தவிர வேறு எதையும் தேடவில்லை. பல காலமாக, இந்த அழகான எல்லைப் பகுதி இணக்கமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயகத்தின் உணர்வையும் தேசிய பாதுகாப்பையும் நிலைநிறுத்தி வருகிறோம். லடாக் வன்முறையில் நான்கு அப்பாவி இளைஞர்களின் மரணம் மற்றும் பலருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். லடாக்கில் ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஜனநாயகம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட வேண்டும்" என்று கார்கே தெரிவித்துள்ளார்
செப்டம்பர் 24-ஆம் தேதி லேவில் நடந்த வன்முறை தொடர்பாக, சோனம் வாங்சுக் உட்பட மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று லடாக் காவல்துறை இயக்குநர் எஸ்டி சிங் ஜம்வால் இன்று தெரிவித்தார். வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT