Last Updated : 27 Sep, 2025 04:50 PM

1  

Published : 27 Sep 2025 04:50 PM
Last Updated : 27 Sep 2025 04:50 PM

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனோஜ் சின்ஹா, “நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதம் குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தற்போது பெருமளவில் பயங்கரவாதம் இல்லாத நிலையில்தான் உள்ளன. இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்ஸலிசம் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அடுத்த சில மாதங்களில் அது நாட்டில் இருந்து துடைத்தெறியப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கர்நாடகா, கேரளா குறிப்பாக ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் சில பகுதிகள் நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது மிகப் பெரிய தடையாக இருக்கிறது.

பாதுகாப்புப் படையினரும் நிர்வாகமும் தங்கள் பணிகளைச் செய்கிறார்கள். இதில், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ இதுபோன்ற செயல்கள் அதிகரிக்க வழிவகுக்கும் எதிலும் மக்கள் ஈடுபடக்கூடாது. ஏனெனில், அது அதிக சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

ஜம்மு காஷ்மீரில் நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது. தெருக்களில் நடக்கும் வன்முறை, கல்வீச்சு சம்பவங்கள் போன்றவை கடந்த கால விஷயங்களாகிவிட்டன. பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை நாட்டின் பிற பகுதிகளைப் போலவே செயல்படுகின்றன. எந்த ஒரு பெரிய பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரும் தற்போது உயிரோடு இல்லை. இந்த ஆண்டு இதுவரை ஒரே ஒரு உள்ளூர் நபர் மட்டுமே பயங்கரவாத அமைப்பு ஒன்றில் சேர்ந்துள்ளார்.

துரதிஷ்டவசமாக நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) எப்போதும் நமக்கு எதிராக ஏதாவது தீய செயல்களைச் செய்யும். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டை கட்டமைப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது, பின்னர் ஜம்மு காஷ்மீரை தாக்கியது. அவர்கள் நான்கு நேரடிப் போர்களை நடத்தி தோற்றனர். இந்தியாவுடன் நேரடிப் போரில் வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான், மக்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் மறைமுக போரில் ஈடுபடுகிறார்கள்.

பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும்? இதைத் தடுப்பது அரசாங்கம் மற்றும் படைகளின் கடமை என்றாலும், மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே, இதைத் தடுக்க மக்களும் முன்வர வேண்டும்.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பைப் போல, இங்குள்ள சிலர் பேசுகிறார்கள். தவறான கதைகள் உருவாக்கப்படும்போது அது பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு தனது சமூக ஊடகப் பக்கங்களில் என்ன கூறுகிறதோ அதையே மக்களும் கூறுவார்களேயானால் அது நிச்சயமாக ஆபத்தானது" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x